கோலாலம்பூர், ஏப்ரல் 16 – கடுமையான வாகன நெரிசலில் சிக்கி, 18 மணி நேரத்திற்கு பின் வீட்டை சென்றடைந்த ஆடவர் ஒருவர், வீட்டு சாவியை, திரங்கானுவிலுள்ள, தனது சொந்த ஊரில் தவற விட்டு வந்ததை அறிந்ததும் எப்படி உணர்ந்தார் என்பதைப் பகிர்ந்து கொண்ட வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அந்நபர் ஏமாற்றத்துடன் காணப்படும் காணொளி @Ceokuterer எனும் அவரது டிக்டொக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அது இணைய பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“18 மணி நேர பயணத்திற்குப் பிறகு கோலாலம்பூர் வந்தடைந்தேன், ஆனால் எனது சாவியை திரங்கானுவிலேயே தவற விட்டுவிட்டேன்” என அந்த காணொளியின் கீழ் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியை இதுவரை எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள வேளை, நான்காயிரத்துக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.
“தற்போது வாகன நெரிசல் இல்லை. திரங்கானுவிற்கு சென்று சாவியை எடுத்து வாருங்கள்” என இணையப் பயனர்கள் சிலர் கூறியுள்ள வேளை ;
“அஞ்சலில் அனுப்ப சொல்லுங்கள்” எனவும் சிலர் கருத்துரைத்துள்ளனர்.