
சென்னை, மே-30-தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட திறமைகளை கௌரவிக்கும் 18-ஆவது எடிசன் திரைப்பட விருது விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த பிரம்மாண்ட விழாவில் மலேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் ஏ2பி சீனிவாசன், லீமா ரோஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சிறப்பம்சமாக, அடுத்தாண்டு முதல் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரில் புதிய சிறப்பு விருது வழங்கப்படும் என எடிசன் விருதுகளின் தலைவர் செல்வகுமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இவ்வாண்டுக்கான முக்கிய விருதுகளில், சிறந்த நடிகராக ‘பைசன்’ படத்தின் மூலம் துருவ் விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த இயக்குநருக்கான விருதை அதே ‘பைசன்’ படத்திற்காக மாரி செல்வராஜ் வென்றார்.
சிறந்த வில்லன் விருதை ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் தட்டிச் சென்றார்.’ஆண் பாவம் பொல்லாதது’ படத்திற்காக, சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருதை விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் வென்றார்.
டைனமிக் பெர்ஃபார்மர் விருது நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு வழங்கப்பட்டது.பாடகி சைந்தவி ‘The Voice Beyond Boundaries’ விருது பெற்றார்; நாட்டுப்புறப் பாடகர் அந்தோணி தாசன் ‘Voice Of Tradition’ விருதுப் பெற்றார்.
மூத்த நடிகர் தம்பி ராமையா, ‘முதல் பக்கம்’ திரைப்படத்திற்காக ‘Veteran Performer’ விருதுப் பெற்றார். இவ்வேளையில், வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த நடிகர் ராதாரவிக்கு வழங்கப்பட்டது.
மேலும், தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் நோக்கில் ‘எடிசன் மில்லியனரி கிளப்’ என்ற புதிய அமைப்பும் இந்த விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டுக்கான எடிசன் திரைப்பட விருதுகள், தமிழ் சினிமாவின் சிறப்பை மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துக்காட்டியதுடன், அதன் சாதனைகளை உலகளாவிய அளவில் கொண்டு செல்ல புதிய வாயில்களையும் திறந்து வைத்துள்ளது.



