ஜோகூர் பாரு, ஜூலை-29 – ஜோகூர் மாநில பள்ளிகளின் விளையாட்டு மன்றத்தின் (MSSJ) 2024-ஆம் ஆண்டுக்கான நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற 900 மாணவர்களில், 19 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
கடந்த வார செவ்வாய்க்கிழமை முதல் வியாழன் வரை அப்போட்டி நடைபெற்றது.
அரேனா லார்கின் (Arena Larkin) உள்ளரங்கில் உள்ள நீச்சல் குளத்தின் நீர் காரணமாக அவர்கள் வாந்தி, காய்ச்சல், தோல் அரிப்பு போன்ற உபாதைகளுக்கு ஆளாகி அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் அவர்களில் இன்னும் ஒரு மாணவர் மட்டுமே சுல்தானா அமீனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃவிஸ் கா’சி (Datuk Onn Hafiz Ghazi) தெரிவித்தார்.
போட்டிக்குப் பயன்படுத்தப்பட்ட இரு நீச்சல் குளங்களின் நீருக்கும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் நேரடி தொடர்புண்டா என்பதைக் கண்டறிவதற்காக, நீர் மாதிரி எடுக்கப்பட்டு இரசாயணத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகள் தெரிய வரும் வரை, அந்த நீச்சல் குளங்கள் தற்காலிமாக மூடப்படுவதாக டத்தோ ஓன் சொன்னார்.