
லண்டன், ஏப்ரல்- 5 – 1948-ஆம் ஆண்டு பத்தாங் காலியில் நிராயுதபாணியாக நின்றிருந்த மலாயா சீனர்கள் 24 பேரை பிரிட்டிஷ் இராணுவம் படுகொலை செய்த சம்பவத்துக்கு, பிரிட்டன் அரசாங்கம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
அப்படுகொலை தொடர்பான நடவடிக்கைச் செயற்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், பிரிட்டன் வெளியுறவு அமைச்சின் இணை அமைச்சர் கேத்தரீன் வெஸ்ட் வாயிலாக அவ்வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
அது ஒரு துயரம் என வருணித்த கேத்தரீன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமூகத்துக்கும் ஆற்றொண்ணா சோகத்தைக் கொடுத்துள்ளதை ஒப்புக் கொண்டார்.
பாதிக்கப்பட்டவர்களை கம்யூனிஸ்ட் அனுதாபிகளாக சித்தரிக்கும் தவறான கதைகளால், அதில் உயிர் பிழைத்தவர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் தொடர் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மார்ச் 31-ஆம் தேதியிடப்பட்ட அக்கடிதத்தில் வேஸ்ட் கூறினார்.
எனவே, அச்சம்பவத்தால் ஏற்பட்ட வலி மற்றும் விளைவுகளை ஒப்புக்கொள்கிறோம்; பல குடும்பங்கள் அனுபவித்த துர் மரணங்கள் மற்றும் வலிக்கு இங்கிலாந்து அரசு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார் அவர்.
இங்கிலாந்தின் பதிலை வரவேற்ற நடவடிக்கைச் செயற்குழு, இச்சம்பவத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் தனது தவறை சந்தேகத்திற்கு இடமின்றி ஒப்புக் கொள்வது இதுவே முதல் முறை என்றும் கூறியது.
1948-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பத்தாங் காலியில் மொத்தம் 24 கிராம மக்கள் பிரிட்டிஷ் வீரர்களால் கொல்லப்பட்டனர்.
மலாயாவின் காலனித்துவ அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி பிரச்சாரத்தைத் தொடங்கிய மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சந்தேகத்தின் பேரில், அவர்கள் கொல்லப்பட்டனர்.
அச்சம்பவத்துக்கு பிரிட்டன் அரசே முழுப் பொறுப்பு என, 2015-ஆம் ஆண்டு பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.