கோலாலம்பூர், நவம்பர்-20, 1MDB வழக்கில் தேடப்படும் கோடீஸ்வரர் ஜோ லோவ் (Jho Low) மியன்மார் நாட்டில் ஒளிந்திருக்கலாமென பிரபல வழக்கறிஞர் தான் ஸ்ரீ முஹமட் ஷாஃபியி அப்துல்லா ( Tan Sri Muhammad Shafie Abdullah) கூறியுள்ளார்.
டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் முதன்மை வழக்கறிஞரான அவர், 1MDB மற்றும் மற்ற வழக்குகளின் சொல்லப்படாத கதைகள் என்ற தலைப்பில் ஊடகங்கள் பங்கேற்ற ஆய்வரங்கில் அவ்வாறு சொன்னார்.
ஜோ லோவின் நெருங்கிய சகாவும், 1MDB-யின் முன்னாள் ஆலோசகருமான ஜாஸ்மின் லூவிடம் (Jasmine Loo) நடத்தியக் குறுக்கு விசாரணையின் வழி தாம் அம்முடிவுக்கு வந்ததாக ஷாஃபியி கூறினார்.
ஜாஸ்மினுக்கு மியன்மார் கடப்பிதழை வாங்கிக் கொடுத்ததே ஜோ லோ தான்.
அந்த அளவுக்கு அந்நாட்டு தளபதிகளின் பாதுகாப்பில் அவர் செல்வாக்குடன் திகழ்வதாக ஷாஃபியி கூறிக் கொண்டார்.
நெருக்கடி மிக்க மியன்மாரில் எதுவும் சாத்தியம் என்றார் அவர்.
2018-ஆம் ஆண்டு தலைமறைவாகி கடந்தாண்டு சரணடைந்தவரான ஜாஸ்மின், நஜீப் எதிர்நோக்கியுள்ள 1MDB முறைகேடு வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியாவார்.