
கூலாய், செப்டம்பர்-24,
ஜோகூர், செனாய் தொழிற்பேட்டையில் போலீஸார் நடத்திய சோதனையில், தினமும் 1 லட்சம் எரிமின் 5 போதை மாத்திரைகளை தயாரிக்கும் திறன் கொண்ட 2 சட்டவிரோத போதைப்பொருள் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மொத்தம் 4 டன் எடையுடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; அவற்றின் மதிப்பு RM17.77 மில்லியன் ஆகும்.
இது ஜோகூரில் இவ்வாண்டு செய்யப்பட்ட மிகப்பெரிய பறிமுதல் ஆகுமென, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.
செப்டம்பர் 14-ஆம் தேதி ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு இக்கூடத்தின் நடவடிக்கை வெளிச்சத்துக்கு வந்தது.
அங்கு பல்வேறு மாத்திரைகள், தூள், ரசாயன திரவங்கள் மற்றும் தயாரிப்பு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் ஜோகூர் பாரு மற்றும் டேசா இடாமானில் நடைபெற்ற சோதனையில், 250 கிலோ methamphetamine, 20 கிலோ ketamine உட்பட அதிக அளவு போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
மொத்த பறிமுதல் மற்றும் வாகன சோதனைகளின் மதிப்பு RM17.93 மில்லியன்; இவை சந்தைக்குச் சென்றிருந்தால் 1.8 மில்லியன் பேரை பாதித்திருக்கும் என ஹுசேய்ன் ஓமார் சொன்னார்.
41 வயது உள்ளூர் நபர் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ள நிலையில், போதைப்பொருள் கும்பலின் தலைவன் உட்பட மேலும் 3 பேர் தேடப்படுகின்றனர்.