மலேசியா

2 வாரங்களாக மின்தூக்கி பழுது; படியேறி படியேறி கண்ணீர் வடிக்கும் பூச்சோங் ‘பாங்சாபூரி அமான்’ அடுக்குமாடி வாசிகள்

பூச்சோங், ஜூன்-4-சிலாங்கூர், தாமான் பூச்சோங் பிரிமாவில் உள்ள ‘பங்சாப்பூரி அமான்’ அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த இரண்டு வாரங்களாக மின் தூக்கிகள் பழுதடைந்து கிடப்பதால், இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையைக் கழிக்கக் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.

17 ஆண்டுகள் பழமையான இந்த அடுக்குமாடியில், கடந்த 2 வாரங்களாக மின் தூக்கிகள் வேலை செய்யாததால் முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் சிறுவர்கள் தினமும் படியேறி இறங்க வேண்டிய நரக வேதனைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, படிக்கட்டுகளின் கைப்பிடிகள் துருப்பிடித்தும், தீயணைப்புக் கருவிகள் காலாவதியாகியும், குப்பைகள் தேங்கி நாற்றமடித்தும் இப்பகுதி முற்றிலும் சுகாதாரக் கேடாக மாறியுள்ளது.

முன்பிருந்த நிர்வாகத்தின் கீழ் நிலைமை இப்படி மோசமாக இல்லை; கடந்த 2 ஆண்டுகளாகத் தான் இந்த தற்போதைய நிர்வாகத்தின் அலட்சியத்தால் அடுக்குமாடி குடியிருப்பே அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் நிர்வாக உறுப்பினர் சுரேஷ் கூறினார்.

நேற்று முன்தினம் கூட ஒரு மலாய் மாது தன் பிள்ளைகளோடு 20 நிமிடங்கள் மின் தூக்கியினுள் சிக்கிக்கொண்டார்.

பழுதடைந்த மின் தூக்கியில் நாளை எங்களின் பிள்ளைகள் மாட்டிக்கொண்டு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? என அவர் கேட்டார்.

ஒரு மாற்றுத்திறனாளியான தனது கணவர், மின் தூக்கி பழுதால் தினமும் படியேறி இறங்க முடியாமல் படும் கஷ்டத்தை தன்னால் பார்க்க முடியவில்லை என, கோபதி என்பவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

இந்த அவலம் தான் தங்களுக்கு பதிலென்றால், குடியிருப்பாளர்கள் கட்டும் பராமரிப்புக் கட்டணமெல்லாம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போதைய நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தப் பதிலும் இல்லை என மக்கள் குமுறுகின்றனர்.

எனவே, நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் இன்னல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க, பிரதமர் துறை இதில் நேரடியாகத் தலையிட வேண்டும் எனப் பூச்சோங் பாங்சாப்புரி அமான் வாசிகள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!