
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 23 – நெகிரி செம்பிலானிலுள்ள பாத்தாங் பெனார் அருகே கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட மரக் கட்டமைப்பு ரயில் பாதையில் விழுந்ததால், KTM, கொமுயூட்டர் மற்றும் ETS ரயில் சேவைகள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டன.
பாத்தாங் பெனார் மற்றும் லாபு ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள மேல்நிலை மின்கம்பி (Overhead Line) அமைப்பில் அந்த மரக் கட்டமைப்பு மோதி மின்விநியோகம் தடைபட்டதால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக KTMB தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, புலாவ் செப்பாங்–KL சென்ட்ரல் KTM சேவை சிரம்பான் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேவேளை, KL சென்ட்ரல் மற்றும் பத்து கேவ்ஸ் நோக்கிச் செல்லும் சேவைகள் பாங்கி நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. தற்போது பாங்கி–சிரம்பான் இடையே ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக ஷட்டில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், பயணத்தைத் தொடர விரும்பாத ETS பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும்.
பழுதுபார்ப்பு பணிகள் இன்று இரவு 10 மணிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்ப விசாரணையில், கட்டுமான ஒப்பந்ததாரர் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாததுடன், பணிநேர விவரங்களையும் KTMB-க்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், KTMB, பயணிகளிடம் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.



