
கோலாலம்பூர், ஜூலை-24-நாட்டின் முன்னணி பயங்கரவாத தடுப்பு அதிகாரியும், தேசியப் போலீஸ் படையின் துணைத் தலைவருமான தான் ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை, வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் தனது 35 ஆண்டுகால சேவையை நிறைவுச் செய்கிறார்.
புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் ஆற்றிய முக்கிய பணிகளுக்காக அறியப்படும் அவர், தனது சுயசரிதை நூலான ‘From Pendang to Bukit Aman’ அதாவது ‘பெண்டாங்கிலிருந்து புக்கிட் அமான் வரை’ என்ற நூல் வெளியீட்டு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவ்விழாவில், மலாக்கா ஆளுநர் துன் அலி ருஸ்தாம் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இந்நிலையில் நடப்பு பாதுகாப்பு போக்குக் குறித்தும் பேசிய அவர், பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்கு வரவில்லை என்றும், குறிப்பாக ‘Roblox’ போன்ற இணைய விளையாட்டுத் தளங்கள் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் மாறி வருவதாகவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஓய்வுக்குப் பிறகு உடனடியாக எந்தத் திட்டமும் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் அல்-கைடா பயங்கரவாதத் கட்டமைப்பு மற்றும் 1993 உலக வாணிப மைய குண்டுவெடிப்பு விசாரணை குறித்து புதிய புத்தகம் ஒன்றை எழுத விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
35 ஆண்டுகால நாட்டுப்பற்றுக் சேவைக்குச் சொந்தக்காரரான ஆயோப் கானின் இந்த ஓய்வு, அரச மலேசியப் போலீஸ் படையில் ஒரு முக்கிய அத்தியாயத்தின் முடிவைக் குறிக்கிறது.



