டுங்குன், ஆகஸ்ட் 12 – திரெங்கானு, டுங்குனில் (Dungun) உள்ள வீடுடென்றில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த போது இளைஞர் ஒருவரிடம் தங்க வளையல் ஒன்று சிக்கியது.
சமீபத்தில் வேறு ஒருவரிடமிருந்து அந்த வீட்டை வாங்கிய முகமட் சுக்ரி சுலைமான்(Muhamad Sukri Sulaiman) என்பவருக்குத்தான் அந்த 916 தங்க வளையல் கிடைத்திருக்கிறது.
பழைய வீட்டை வாங்கிய நிலையில், தண்ணீர் டாங்கி அடைத்துக் கொண்டிருந்தது.
இதனால், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டேன். அப்போதுதான், அந்த கழிவுநீர்த் தொட்டியிலிருந்து அழுக்குப் படிந்திருந்த நகை கிடைத்தது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே அந்த வீட்டில் குடியிருந்த உரிமையாளருக்குச் சொந்தமானதாக இருக்கக்கூடும் என்று எண்ணி உடனே அதன் உரிமையாளரைச் சென்று பார்த்ததாக, தகவலை முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.
எதிர்பார்த்தது போலவே அந்த வீட்டின் முன்னாள் உரிமையாளரும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நகை தொலைந்துபோய் விட்டதாகக் கூறியுள்ளார்.
விரைவில் அங்கு வந்து நகையைப் பெற்றுக் கொள்வதாகவும் அந்த உரிமையாளர் கூறியிருக்கிறார் என்றும் சுக்ரி தெரிவித்திருக்கிறார்.