
சூரிக், ஜூலை-31 – உலகக் கால்பந்து அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவமாக, அனைத்துலகக் கால்பந்து சம்மேளனமான FIFA நடத்தும் உலகக் கிண்ணப் போட்டிகளை புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து அமைப்பான UEFA-வின் 55 உறுப்பு நாடுகளும் ஏகமனதாக வாக்களித்துள்ளன.
FIFA தலைவர் Gianni Infantino, 20 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு புதிய துணை நிறுவனத்தை உருவாக்கி, அதன் 20 விழுக்காட்டு பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கத் திட்டம் வகுத்திருந்தார்.
இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் ஒவ்வொரு நாட்டுக்கும் 40 மில்லியன் டாலர் வழங்கப்படும் என FIFA அறிவித்திருந்த போதிலும், ஐரோப்பிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
“உலகக் கிண்ணம் விற்பனைக்கு அல்ல” எனக் கூறியுள்ள UEFA, தனியார் முதலீடுகள் விளையாட்டின் நேர்மையைக் கெடுத்து இலாப நோக்கத்தை மட்டுமே முன்னிறுத்தும் எனச் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தத் திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை எந்தவொரு FIFA போட்டிகளிலும் ஐரோப்பிய அணிகள் பங்கேற்காது என UEFA தலைவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.



