Latestஇந்தியா

20 முறை சமைத்தும் ஆட்டிறைச்சி வேகவில்லை; ஆந்திராவில் குக்கருடன் போலீஸ் புகார் செய்த ஆடவர்

அனந்தபூர், மார்ச்-29-போலீஸ் புகார் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா எனும் அளவுக்கு, தென்னிந்திய மாநிலம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ள ஒரு சுவாரஸ்ய சம்பவம் வைரலாகியுள்ளது.

Pressure cooker-ரோடு போலீஸ் நிலையம் வந்த ஒரு முதியவர், ஆட்டிறைச்சி சரியாக வேகவில்லை என புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

உகாதி பண்டிகை முடிந்து, கடையில் தலைக்கறி ஆட்டிறைச்சியை வாங்கி வந்து 20 விசில் வரும் வரை சமைத்தும், இறைச்சி வேகாமல் கடினமாகவே இருந்ததாம்.

இதனால், கடைக்காரர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு, அந்த ஆட்டிறைச்சி கடைக்காரரை தொடர்புகொண்டனர்.

‘வேகாத’ அந்த இறைச்சி முதிர்ச்சி அடைந்த ஆட்டிலிருந்து வந்திருக்கலாம் எனக் கூறிய கடைக்காரர், வேறோர் ஆட்டின் தலைக்கறியை அதே எடைக்குத் தர ஒப்புக் கொண்டார்.

அதோடு, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு கிலோ ஆட்டிறைச்சியை இலவசமாகவே தருவதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்தே, புகார்தாரர் சமாதானமானார்.

போலீஸாரும் இந்த ஆட்டிறைச்சி பஞ்சாயத்தை சமரசமாக முடித்து வைத்து பெருமூச்சு விட்டனர்.

எத்தனையோ விசித்திரமான புகார்களைப் பார்த்துள்ள போலீஸார், ஆட்டிறைச்சி வேகவில்லை எனக் கூறி குக்கரோடு வந்தவரை இப்போது தான் பார்த்திருப்பர்.

போலீஸாரின் நிலைமையைப் பார்த்தாலும் பாவமாகத் தான் இருக்கிறது என, சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!