
கம்பார், ஆகஸ்ட்.14- பேராக், கம்பாரில் வீடொன்றில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் 200,000 ரிங்கிட் மதிப்புள்ள பணமும் நகைகளும் இருந்த பாதுகாப்புப் பெட்டகம் களவாடப்பட்டது. அக்கொள்ளை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 10 ஆம் தேதி, அவ்வீட்டில் இருந்த நபர் வேலைக்குச் சென்றிருந்த போது, அக்கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்ததாக Kampar மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendent Mohamad Nazri Daud தெரிவித்தார். வேலையிலிருந்து திரும்பிய அந்நபர் வீடு அலங்கோலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அதோடு, பணம் மற்றும் பல்வேறு நகைகள் இருந்த பாதுகாப்புப் பெட்டகமும் காணாமல் போயிருந்ததைக் கண்டறிந்தார்.
அதனை அடுத்து கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கண்டறிய பகாங், Brinchang பகுதியில் வீடொன்றில் நடத்தப்பட்ட சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் 35 வயதுடைய இந்தோனேசியர். மற்றொருவர் 40 வயதுடைய உள்ளூர் நபராவார்.
அச்சோதனையின் போது, வீடு புகுந்து திருடியது என நம்பப்படும் பல நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக Mohamad Nazri கூறினார். சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்காக இம்மாதம் 17-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



