
ஸ்டோக்ஹோம், ஜனவரி-31, 2023-ஆம் ஆண்டு ஸ்வீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை எரித்த சல்வான் மோமிகா (Salwan Momika) எனும் ஈராக் கிறிஸ்தவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மோமிகா கொல்லபட்டதாகக் கூறிய போலீஸ், இதுவரை ஐவரை சந்தேகத்தின் பேரில் கைதுச் செய்துள்ளது.
அக்கொலையைக் கண்டித்துள்ள ஸ்வீடன் பிரதமர் Ulf Kristersson, அத்தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கலாமென யூகத்தைக் கிளப்பியுள்ளார்.
இஸ்லாமிய எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பெயர் பெற்றவனான மோமிகா, 2023-ல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் மசூதிக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, குரானை எரித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தினான்.
இது முஸ்லீம் உலக நாடுகளின் கடும் கண்டனங்களைப் பெற்றது.
ஸ்டோக்ஹோம் மசூதி சம்பவம் தவிர, இதர 3 சந்தர்ப்பங்களிலும் அவன் குரானை எரித்துள்ளான்.
அவனுக்கு உடந்தையாக சல்வான் நஜிம் (Salwan Najim) என்பவனும் குரானை எரித்துள்ளான்.
அது தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவாகி விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று வியாழக் கிழமை தீர்ப்பு வந்திருக்க வேண்டும்.
திடீரென மோமிகா சுட்டுக் கொல்லப்பட்டதால், வழக்கின் தீர்ப்பை ஸ்டொக்ஹோம் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.