
புத்ராஜெயா, ஏப்ரல்-11-தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில், மத்தியஸ்தம் என்பது மிகவும் பயனுள்ள முறையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மட்டும் 147 சம்பவங்களுக்கு மத்தியஸ்தம் மூலம் சமரசத் தீர்வுக் காணப்பட்டதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கூறியது.
இச்சாதனை, சட்ட நடவடிக்கைகளில் மட்டுமே நம்பியிருக்காமல், கலந்துரையாடல், பரஸ்பர புரிதல் மற்றும் சமரச மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகளும் சமூகத்தில் நிலையான அமைதியை உருவாக்குவதைக் காட்டுவதாக, அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்தார்.
மத்தியஸ்தம் என்பது, நடுநிலையான ஒரு மூன்றாம் நபரின் உதவியுடன், இரு தரப்பினருக்கும் ஏற்ற தீர்வை கண்டுபிடிக்கும் செயல்முறையாகும்.
இச்சேவை பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதுடன், நீதிமன்ற நடைமுறைகளை விட விரைவாகவும் எளிதாகவும் அணுகக்கூடியதாக உள்ளதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அண்டை வீட்டாரிடையிலான முரண்பாடுகள், சத்தம் குறித்த புகார்கள், வாகன நிறுத்த பிரச்னைகள் மற்றும் குடும்ப தகராறுகள் போன்ற பல்வேறு தினசரி பிரச்னைகளும் இதன் மூலம் தீர்க்கப்படுகின்றன.
எனவே, மத்தியஸ்த முறையின் முக்கியத்துவத்தை மேலும் பரப்புவதற்கும், சமூக நடுவர்களின் பங்கினை வலுப்படுத்துவதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இம்முயற்சிகள், நாட்டின் ஒற்றுமை மற்றும் சமூக அமைதியை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றும் என்றும் டத்தோ ஏரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.



