
கோலாலம்பூர், மே 20- வருகின்ற மே 21 மற்றும் 22-ஆம் தேதி கோலாலும்பூரில் நடைபெறவிருக்கும் 2025 ஆசியான் மாநாட்டை முன்னிட்டு, காவல்துறையினர், போலீஸ் வாகனங்களை பயன்படுத்தி சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை மூடல்கள் தொடர்பான மிகப்பெரிய அளவிலான பயிற்சியினை (large-scale dry run) மேற்கொள்ளவிருக்கின்றனர்.
46வது ஆசியான் மாநாட்டில் உலக பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், போலீசார் எந்தவித தங்கு தடைகளுமின்றி சாலை போக்குவரத்தைக் கையாளுவதற்கும் மக்களுக்கு மாநாட்டின் போது சாலையின் சூழல் எப்படி இருக்கும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்த மோட்டார் வாகன அணிவகுப்பு பயிற்சி நடத்தப்படுகின்றது, என்று புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பாஸ்ரி (Datuk Seri Mohd Yusri Hassan Basri) கூறியுள்ளார்.
மேலும் இந்த ஒத்திகையில், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) முதல் நகர மையத்தில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகள், KLCC மற்றும் இஸ்தானா நெகாரா வரையிலான பாதைகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, அடுத்த 2 நாட்கள் நடக்கவிருக்கும் இந்த ‘dry run’ பயிற்சிக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.