
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-8 – 2025-ஆம் ஆண்டு முதல் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய 713 ‘Deepfake’ சமூக ஊடகப் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
2025 ஜனவரி ஒன்றாம் தேதி முதல், இவ்வாண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், MCMC எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சமூக ஊடகச் சேவை வழங்குநர்கள் அந்தப் பதிவுகளை அகற்றியதாக அவர் கூறினார்.
பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், சமூக ஊடகத் தளங்களின் விதிமுறைகள் மற்றும் நாட்டின் சட்டங்களை மீறியதன் அடிப்படையில் அந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டதாக, நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் ஃபாஹ்மி தெரிவித்தார்.
அதேவேளை, MCMC அரசியல் சார்புடன், தேர்ந்தெடுத்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.
அரசியல் நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல், சட்டத்தின் அடிப்படையிலேயே MCMC நடவடிக்கை எடுப்பதாக அவர் சொன்னார்.
வழக்குகள் நீதிமன்ற நடவடிக்கைக்குக் கொண்டுச் செல்லப்படுவதற்கு முன்பு, விசாரணை அறிக்கைகள் சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.



