Latestமலேசியா

2025-ஆம் ஆண்டு முதல், இணைய சூதாட்ட உள்ளடக்கங்களில் 98 விழுக்காட்டை MCMC நீக்கியுள்ளது – தியோ

கோலாலம்பூர், நவ- 3 –2025ஆம் ஆண்டு முதல் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வரை, மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, இணைய சூதாட்ட உள்ளடக்கங்களில் 98 விழுக்காட்டை நீக்கியுள்ளது. அக்காலகட்டத்தில், உள்ளடக்கங்களை நீக்குவதற்காக 7,38,372 கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில், 7,24,879 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டதாக தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சர் Teo Nie Ching தெரிவித்தார். அதோடு 2,603 சூதாட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இணைய சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த MCMC-யின் தொழில்நுட்பத் திறன் மற்றும் காவல்துறையுடனான ஒத்துழைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு Teo பதிலளித்தார். அரசாங்கம் இவ்விவகாரத்தைத் தீவிரமாகக் கையாள்கிறது. 1953ஆம் ஆண்டு பொது சூதாட்ட இல்லங்கள் சட்டத்தின் கீழ் காவல்துறை முக்கிய அமலாக்க அமைப்பாகச் செயல்படுவதாகவும், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025 ஆகியவற்றின் கீழ் MCMC நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் விளக்கினார்.

MCMC, காவல்துறைக்கு புலனாய்வு உதவி, தகவல் மற்றும் டிஜிட்டல் தடயவியல் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆதரவுகளை வழங்கி வருகிறது. இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 573 சூதாட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டதுடன், 2,53,424 இணையவழி சூதாட்ட உள்ளடக்கங்களும் சேவை வழங்குநர்களின் ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டதாக Teo தெரிவித்தார்.

மேலும், 2026ஆம் ஆண்டு FIFA உலகக் கிண்ணம் தொடர்பான சட்டவிரோத பந்தய நடவடிக்கைகள் உட்பட, இணைய சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை தலைமையில் மேற்கொள்ளப்பட்ட Op JOL, Op Soga XI உள்ளிட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளிலும் MCMC பங்காற்றியுள்ளது. சட்டவிரோத இணையதளங்களுக்கான இணைப்புகளைக் கொண்ட குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதைத் தடுக்கும் வகையில், Op Pancing, Op Delusi நடவடிக்கைகளிலும் காவல்துறை மற்றும் சேவை வழங்குநர்களுடன் இணைந்து செயல்பட்டதாக அவர் கூறினார்.

சட்டவிரோத சூதாட்ட உள்ளடக்கங்கள் மற்றும் இணையதளங்கள் மீண்டும் தோன்றுவதைத் தடுக்க, கண்காணிப்பு, உள்ளடக்கங்களை நீக்குவது, இணையதளங்களை முடக்குவது ஆகிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அமலாக்க நிறுவனங்கள் மற்றும் இணையச் சேவை வழங்குநர்களுடனான ஒருங்கிணைப்பும் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என Teo குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!