
கோலாலம்பூர், நவ-3 –Mutiara Damansara மற்றும் Bandar Utama நிலையங்களுக்கு இடையிலான MRT காஜாங் வழித்தடத் தண்டவாளப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கேபிள்களைத் திருட முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
அதிகாலை 12.58 மணியளவில் ஐந்து பேர் தண்டவாளப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஓடிக் கொண்டிருப்பதாக காஜாங் வழித்தட செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், அதிகாலை 1.25 மணியளவில் Mutiara Damansara நிலையம் அருகே அவர்களில் ஒருவர் பிடிபட்டதாக Rapid KL அறிக்கையொன்றில் தெரிவித்தது.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் துண்டிக்கப்பட்ட கேபிள்களும், அவற்றைத் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சில கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர் அடுத்த கட்ட விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக Rapid KL கூறியது. அச்சம்பவத்தால் காஜாங் வழித்தட ரயில் சேவையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ்வேளையில், கேபிள் திருட்டு முயற்சிகள் மற்றும் தண்டவாளப் பகுதிக்குள் அத்துமீறி நுழைவது போன்ற செயல்கள் பொதுமக்களின் உயிருக்கும் ரயில் உள்கட்டமைப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என Rapid KL எச்சரித்தது. எனவே, பொதுமக்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.



