
கோலாலம்பூர், செப்டம்பர் 6 – 2026-ஆம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவை (PAU) செப்டம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இம்முறை பக்காத்தான் ஹராப்பான் (PH) கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறுகையில், கடந்த வாரம் கிளந்தான் கோத்தா பாருவில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 72ஆவது பொதுப் பேரவைக்கு அம்னோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு பதிலளிக்கும் வகையில், பாஸ் தலைமைத்துவத்திற்கு அம்னோ அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை, இப்பொதுப் பேரவையில் 16ஆவது பொதுத் தேர்தலை (PRU16) எதிர்கொள்வதற்காக எந்தவொரு கூட்டணியுடனும் ஒத்துழைப்பை முடிவுசெய்யப் போவதில்லை என்றும் சாஹிட் தெரிவித்தார். மாறாக, கூட்டணி அமைப்பதால் அம்னோ மற்றும் பாரிசான் நேஷனலுக்கு ஏற்படக்கூடிய நன்மை, பாதிப்பு குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
மேலும், மலாய் மக்களின் ஒற்றுமை அம்னோவுக்குள் மட்டுமின்றி அனைத்து மலாய் கட்சிகளுக்கும் இடையே ஏற்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என்றும் சாஹிட் கூறினார்.



