Latestமலேசியா

2027 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் இந்திய சமூகத்திற்கான RM350 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு

2027 பட்ஜெட்டில் மித்ராவுக்கு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாக, இன்று அதனை மக்களவையில் தாக்கல் செய்தபோது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

இந்திய இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு இந்த நிதியில் முன்னுரிமை அளிக்கப்படும். தொழில்துறை தானியக்கம், தொழில்நுட்பம் மற்றும் விமானப் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.

அதேவேளை, TEKUN மற்றும் அமானா இக்தியார் மலேசியா மூலம் இந்திய தொழில்முனைவோருக்கான சிறுகடன் திட்டத்திற்கு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. சீனப்பள்ளிகளுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டும், தேசியப் பள்ளிகளுக்கு 900 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்படுகின்றன. அனைத்து வகைப் பள்ளிகளின் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்கான மொத்த நிதி, ஒரு பில்லியனிலிருந்து இரண்டு பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது.

JAKIM-இல் பதிவுபெற்ற சமயப் பள்ளிகள், தஹ்ஃபிஸ் மற்றும் பொண்டோக் கல்வி நிலையங்களுக்கு 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

முதலாம் ஆண்டு மாணவர்களின் அதிகரிப்பைச் சமாளிக்க, 3,500 கூடுதல் வகுப்பறைகள் இவ்வாண்டு இறுதிக்குள் தயாராகும் என பிரதமர் தெரிவித்தார்.

பள்ளித் தொடக்க உதவித்தொகை மாணவர் ஒருவருக்கு 150-லிருந்து 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது.

மேலும், 800,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான RMT உணவுத் திட்டத்திற்கு 870 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

90,000 படிவம் ஆறு மாணவர்களுக்கு 2,500 ரிங்கிட் வாழ்க்கைச் செலவுப் படித்தொகை வழங்கப்படும்.

உயர்கல்வி அமைச்சுக்கு 19.1 பில்லியன் ரிங்கிட்டும், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 800 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்படுகின்றன.

PTPTN கடன் பெற்றவர்களில் மாத வருமானம் 2,500 ரிங்கிட் மற்றும் அதற்குக் கீழுள்ளவர்களுக்குத் தவணை ஒத்திவைப்பு வழங்கப்படும். நிலுவையின்றி முறையாகக் கடனைச் செலுத்துவோருக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும்.

FlySiswa விமான டிக்கெட் உதவித்தொகையும் 400-லிருந்து 500 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது.

குறைந்தபட்ச மாதச் சம்பளம் 1700 ரிங்கிட்டிலிருந்து 2000 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது.

2027ஆம் ஆண்டுக்கான STR, SARA திட்டங்களின் ஒதுக்கீடு 15 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 16 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

STR பெறுநர்கள் அனைவருக்கும் மாதம் அதிகபட்சம் 150 ரிங்கிட் அல்லது ஆண்டுக்கு 1,800 ரிங்கிட் வரை SARA உதவி வழங்கப்படும் என்றும், இதனால் ஒன்பது மில்லியன் பேர் வரை பயனடைவார்கள் என்றும் அன்வார் தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்தில் My50 பயணச் சலுகை தொடரும் நிலையில், 40,000 KTM Komuter பயணிகளுக்காக MyKomuter50 அறிமுகப்படுத்தப்படும். பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசப் பயணப் பாஸ் வழங்கப்படும்.

38,000 டாக்சி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கும், 15,000 பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கும் ஒருமுறை 1,000 ரிங்கிட் உதவித்தொகை வழங்கப்படும்.

மது அல்லது போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுவோர், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் சாலைப் போக்குவரத்துச் சட்டம் திருத்தப்படும்.

ஒப்பந்த ஊழியர்கள் உட்பட Grade Utama B மற்றும் அதற்குக் கீழுள்ள 1.3 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு 1,500 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கப்படும். ஓய்வூதியம் பெறும் மற்றும் பெறாத முன்னாள் ராணுவத்தினர் உட்பட ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட அரசு ஓய்வுபெற்றோருக்கு 750 ரிங்கிட் வழங்கப்படும்.

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் 1,000-லிருந்து 1,350 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகிறது. பணிக்காலம் முழுவதற்குமான மகப்பேறு விடுப்புத் தகுதி 360-லிருந்து 490 நாட்களாக உயர்த்தப்படும் நிலையில், ஒவ்வொரு பிரசவத்திற்கும் அதிகபட்சம் 98 நாட்கள் விடுப்பு வழங்கப்படும்.2027 SEA மற்றும் ASEAN பாரா விளையாட்டுப் போட்டிகளை மலேசியா நடத்தவுள்ள நிலையில், முன்னேற்பாடுகளுக்கு 240 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

அரசுக் கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்த, 2027 முதல் அரசுத் திட்டங்களின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஒப்பந்த மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் என்றும் பிரதமர் 2027 பட்ஜெட்டில்
அறிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!