
கோலாலம்பூர், அக்டோபர்-17,உள்ளூர் திரைப்படத் துறை, இசை மற்றும் படைப்பாக்க உள்ளடக்கங்களை ஆதரிப்பதற்காக, 2027 பட்ஜெட்டில் 130 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தவிர, 2027 முதல் கூட்டரசு பிரதேசத்தில் உள்ளூர் திரைப்படங்கள் மற்றும் மேடை நாடக டிக்கெட்டுகளுக்கு முழுமையான கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படவுள்ளதாக, தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையால் சினிமா மற்றும் மேடை நாடகங்களைப் பார்ப்பதற்கான கட்டணங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
அதே சமயம், மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தும் திரைப்பட மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளுக்குத் தொடர்ந்து ஊக்கத்தொகை வழங்கப்படுவதோடு, நாட்டின் கலாச்சாரம் மற்றும் பெயரை உயர்த்தும் படைப்புகளுக்குக் கூடுதல் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படும் என்றார் அவர்.
அனிமேஷன் துறையைப் பொறுத்தவரை, அனைத்துலகச் சந்தைக்கு ஏற்ற வகையில் 20 புதிய அறிவுசார் சொத்துக்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர, உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த ‘Kembara Riuh 2027’ திட்டத்திற்கு 10 மில்லியன் ரிங்கிட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்ட பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகளுக்கு மானியம் வழங்கும் CEMI திட்டத்திற்கு 4 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் படைப்புகளை ஆதரிப்பதும், நமது கதைகளை உலக அரங்கிற்குக் கொண்டுச் செல்வதுமே மடானி அரசாங்கத்தின் தெளிவான இலக்காகும் என ஃபாஹ்மி வீடியோ வாயிலாகத் தெரிவித்தார்.



