
கோலாலாம்பூர், அக்டோபர்-14,2027 பட்ஜெட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் பராமரிப்பு வசதிகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதை, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு பெரிதும் வரவேற்றுள்ளது.
இத்தகைய முன்னெடுப்புகள், முதியோர் மரியாதையுடன் வாழவும், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் முழுமையாகப் பங்கேற்கவும் வலுவான ஆதரவை வழங்கும் என, அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரி நம்பிக்கைத் தெரிவித்தார்.
முதியோர் நலனுக்காக சமூகநலத் துறை நிதி RM1.3 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 200,000 முதியவர்கள் பயனடைவர்; மேலும், முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கான சேவை வரி 8-லிருந்து 6 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது.
அதேவேளை, மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு RM1.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
படுத்தப் படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி RM500-லிருந்து RM600-ராக உயர்த்தப்படுவதுடன், வேலை செய்யும் மாற்றுத்திறனாளிகள் உதவி பெறுவதற்கான தகுதி வருமான வரம்பு RM1,700-லிருந்து RM2,000-மாக அதிகரிக்கப்படுகிறது.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள 15 சமூக மறுவாழ்வு மையங்கள் சிறப்புத் _teraphy_ மையங்களாகத் தரம் உயர்த்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களைப் பராமரிக்கும் குடும்பங்களுக்கும் கூடுதல் வசதிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



