
கோலாலாம்பூர், அக்டோபர்-16,சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, பராமரிப்பு மற்றும் ஆரம்பகால வழிகாட்டுதலை வலுப்படுத்தும் நோக்கில் 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு வரவேற்றுள்ளது.
ஒவ்வொரு குழந்தையும் தனது திறனை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும், ஆரம்பக்கட்ட உதவி மற்றும் _teraphy_ மூலம் தன்னம்பிக்கையுடன் வளரவும் இந்த உதவிகள் துணைபுரியும் என அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரி தெரிவித்தார்.
இதன் கீழ், சிறப்புக் கல்வி மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை RM150-லிருந்து RM200-ராக உயர்த்தப்படுகிறது; இதனால் ஆட்டிசம் உள்ளிட்ட சிறப்புத் தேவைகளைக் கொண்ட சுமார் 150,000 மாணவர்கள் பலனடைவர்.
மேலும், கிராமப்புற மாணவர்களுக்காக 130-க்கும் மேற்பட்ட புதிய ‘Tunas Istimewa’ வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதுடன், மலாக்கா மற்றும் பஹாங்கில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான 2 புதிய ‘PERMATA Kurnia மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அதே சமயம், 15 சமூக மறுவாழ்வு மையங்கள் சிறப்புத் _teraphy_ மையங்களாகத் தரம் உயர்த்தப்படுகின்றன.
தவிர, அரசாங்க வளாகங்களில் குழந்தைப் பராமரிப்பு மையங்களை மேம்படுத்த RM20 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் குழந்தைகளுடன் சேர்த்து, அவர்களைப் பராமரிக்கும் குடும்பங்களுக்கும் பெரும் ஆதரவாக அமையும் என அமைச்சர் நேன்ஸி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.



