
கோலாலம்பூர், அக்டோபர்-18 – அடுத்தாண்டு நோன்புப் பெருநாளை வரவேற்கவும், நாட்டின் 70-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவும் மலேசியர்களுக்கு SARA உதவித்தொகை வழி கூடுதல் ஆதரவு கிடைக்கவுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட மலேசியர்களுக்கு, இந்த இரு கொண்டாட்டங்களையும் முன்னிட்டு தலா 100 ரிங்கிட் என மொத்தம் 200 ரிங்கிட் வழங்கப்படவுள்ளதாகத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், நடுத்தர வருமானம் பெறுவோர் உட்பட சுமார் 13 மில்லியன் மலேசியர்கள் பயனடைவார்கள் என்றார் அவர்.
இந்த உதவி ரொக்கமாக வழங்கப்படாமல், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குத் தகுதியுள்ளவர்களின் MyKad அடையாள அட்டையில் வரவு வைக்கப்படும். முதல் கட்டத் தொகை நோன்புப் பெருநாளுக்கு முன்பாகவும், இரண்டாவது கட்டத் தொகை சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டும் வழங்கப்படும்.
இதனிடையே, SARA உதவியைக் கொண்டு பொருட்கள் வாங்கும் வசதியும் அடுத்தாண்டு மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. நாடு முழுவதும் FAMA அமைப்பின் கீழ் செயல்படும் 216 உழவர் சந்தைகளில், காய்கறிகள் உள்ளிட்ட புதிய உணவுப் பொருட்களையும் மக்கள் வாங்க முடியும்.
பொதுமக்கள் தங்களது தகுதியை அதிகாரப்பூர்வ SARA இணையத்தளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு ஃபாஹ்மி கேட்டுக்கொண்டார்.



