Latestமலேசியா

2028 முதல் CLP தேர்வுக்கு அமருவோருக்கு கையெழுத்துத் தேர்வுகள் இருக்காது 

கோலாலம்பூர், ஜூலை.31- 2028 ஆம் ஆண்டு முதல் CLP எனும் சட்டப் பயிற்சிச் சான்றிதழ் தேர்வுக்கு அமருவோருக்கு கையெழுத்துத் தேர்வு இருக்காது. நடப்பில் உள்ள முறைக்கு மாற்றாகச் சீரமைக்கப்பட்ட புதிய வழக்கறிஞர் பயிற்சி பாடநெறி அமலுக்கு வரும் போது பல விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கும் ஐந்து நாள் எழுத்துத் தேர்வு முறை இருக்காது.

2028/2029-ஆம் ஆண்டில் CLP-க்கு மாற்றாக அமையவுள்ள இந்த NBC முறையில், தேர்வு எழுதுவோர் இரு வகையான மதிப்பீடுகளுக்கு உட்பட வேண்டியிருக்கும். அதில் பெரும்பாலான பகுதிகள் கணினி வழித் தேர்வுகள் மூலமாகவும், அவற்றுடன் நடைமுறைச் செயல்முறை மதிப்பீடுகள் மூலமாகவும் நடத்தப்படும். தற்போதைய முறையில், சட்டத் தொழில் பயிற்சியில் ஈடுபட விரும்பும் சட்டப் பட்டதாரிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் ஐந்து தாள்களை எழுதித் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது.

ஆங்கில ‘பார்’ (Bar) இறுதித் தேர்வுகளை எழுத முடியாததோடு உள்நாட்டில் வழக்கறிஞராகப் பணியாற்ற விரும்பிய மலேசியர்களுக்கு உதவும் வகையில், CLP முதலில் 1984-இல் தற்காலிகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ், ஆண்டுதோறும் தேர்வெழுதும் சுமார் 1,000 பேரில் 20% பேர் மட்டுமே தேர்ச்சி பெறுவதால், சட்டத் தொழில் தகுதி வாரியம் (LPQB) அது குறித்து அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இதனிடையே மதிப்பீட்டு முறையின் முதல் பகுதியான ‘மாற்றுப் பாடநெறி’ (Conversion Course – CC), வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்கான சான்றிதழைப் பெற NBC-ஐ நிறைவு செய்ய வேண்டிய வெளிநாட்டுச் சட்டப் பட்டதாரிகளுக்காக நடத்தப்படும். இது மூன்று மாத கால மாற்றுப் பாடநெறியாக இருக்கும். அது இணையம் மூலம் நடத்தப்படும். கணினி வழித் தேர்வுகள் மூலம் இந்த மதிப்பீடு இருக்கும்.

இரண்டாவது பகுதியானது ஆறு மாத கால சட்டப் பயிற்சி முதுகலைச் சான்றிதழ் பாடமாக இருக்கும். இது உள்ளூர் பொதுப் பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டத்தில் உள்ள ‘CLP’ கூறு இல்லாத பட்டங்களைப் பெற்ற, உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தனியார் பல்கலைக்கழகச் சட்டப் பட்டதாரிகளுக்கானதாகும்.

இதன் கீழ் மூன்று பகுதிகள் இருக்கும். கணினி வழி மதிப்பீடுகள் நடைபெறும்.

இதனிடையே, மதிப்பீட்டுத் தேர்வுகளில் அமரும் முன் அதனை எழுதுவோர் NBC பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து வாரியம் எதுவும் குறிப்பிடவில்லை.

தற்போதைய CLP முறையின் கீழ், சட்டப் பட்டதாரிகள் ஆண்டுத் தேர்வை எழுதும் முன், உள்ளூர் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பயிற்சிகளில் பங்கேற்கலாம் அல்லது தனியார் பயிற்றுவிப்பாளர்கள் மூலம் சுயமாகப் பயிலலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!