Latestமலேசியா

24 மணி நேர உணவகங்களை மூடுவதா? அது ஆழமாக ஆராயப்பட வேண்டிய விஷயம் என்கிறார் சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர், ஏப்ரல் 24 – மலேசிய மக்கள் மத்தியில் ஆரோக்கியப் பிரச்னை மற்றும் உடல் பருமன் பிரச்னைகளைக் குறைக்கும் விதமாக, உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதைத் தடுக்கும் பரிந்துரை ஆழமாக ஆராயப்படும்.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடன் கலந்தாய்வு நடத்தி, விரிவான ஓர் ஆய்வை மேற்கொள்ள வேண்டிய விவகாரம் அதுவென, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் Dzulkefly Ahmad கூறினார்.

எந்தவொரு தீர்வும் பின்னாளில் சரியான இலக்கை அடைவது உறுதிச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

உதாரணத்திற்கு, மலேசியர்களின் உடல் பருமன் பிரச்னைக்கு 24 மணி நேரமும் செயல்படும் உணவங்களே முக்கியக் காரணம் என்பது சரியான புள்ளி விவரங்களோடு நிரூபிக்கப்பட வேண்டும்.

அப்பரிந்துரையை முன்வைத்த பினாங்கு பயனீட்டாளர் சங்கம் CAP-யின்  நோக்கம் நல்லது தான்; என்றாலும் எல்லா தரப்பு மக்களின் தேவையையும் நன்கு பரிசீலித்தே முடிவு செய்ய வேண்டியிருப்பதாக அமைச்சர் சொன்னார். 

வேலை நேரம் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை; ஆக அவரவர் வசதிப்படவே உணவகங்களுக்குச் செல்ல முடியும்; அது அவரவர் உரிமை.

குறிப்பாக, முன்களப் பணியாளர்கள் அன்றாடமும் ஒரே நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்புவதில்லை; அவர்களின் வேலை அப்படி.

ஒருவேளை 24 மணி நேர உணவகங்கள் இல்லாவிட்டால், அவர்களின் நிலைமைத் திண்டாட்டமாகி விடும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும் என டத்தோ ஸ்ரீ Dzulkefly சுட்டிக் காட்டினார்.

இன்னொன்று, 24 மணி  நேர உணவகங்கள் இல்லையென்றால், மக்கள் ஆரோக்கியமாக இருந்து விடுவார்கள் என்ற எந்தவோர் உத்தரவாதமும் இல்லை.

ஏனென்றால், ஆரோக்கிய உணவுப் பழக்கம் குறித்து நம் மக்களில் பலர் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதே உண்மை என்றார் அவர்.

CAP-யின் அப்பரிந்துரைக்கு மலேசிய முஸ்லீம் உணவக நடத்துநர்கள் சங்கம் PRESMA கடும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!