
மார்ச்- 3-2023 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC மற்றும் பல்வேறு அமுலாக்க அமைப்புகள் இணைந்து, மொத்தம் RM15.5 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் மற்றும் நிதிகளை மீட்டுள்ளன.
2018‑ல் RM37 மில்லியன், 2019‑ல் RM1.2 பில்லியன் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில், 2023‑க்கு பிறகு நடவடிக்கைகள் தீவிரமடைந்து, மிகப்பெரிய அளவில் சொத்துகள் மீட்கப்பட்டத்காக, பிரதமர் தெரிவித்தார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவு மக்களவையில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்விவரங்களை வெளியிட்டார்.
MACC, உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN, அரச மலேசிய சுங்கத் துறை, அரச மலேசியப் போலீஸ் படை உள்ளிட்டவற்றின் கடின உழைப்பு இதனை சாத்தியமாக்கியதாக அவர் சொன்னார்.
இதன் மூலம் மலேசியாவின் ஊழல் கண்ணோட்ட குறியீடும் மேம்பட்டுள்ளது; எனவே, அமுலாக்க நிறுவனங்களிடையே மேலும் அணுக்கமான ஒத்துழைப்பு மற்றும் தகவல் பகிர்வு மூலம் இந்நடவடிக்கைகள் தொடரப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.
இவ்வேளையில், கடந்தாண்டு நவம்பர் முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரை, அந்தஸ்து பார்க்காமல் முக்கியப் புள்ளிகள் மீதும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை பாய்ந்திருப்பதை அன்வார் சுட்டிக் காட்டினார்.
சபா சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர், பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர், இராணுவத்தின் முன்னாள் மூத்த அதிகாரிகள் நால்வர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதே அதற்கு உதாரணம் என்றார் அவர்.
இவை அனைத்தும் மடானி அரசாங்கத்தின் நல்லாட்சி மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான சான்றுகள் என அவர் சொன்னார்.



