
3 குழந்தைகளுக்கு Methadone போதைபொருள் கலந்த மருந்து கொடுத்த தாய்; ஒருவர் மரணம், இருவர் தீவிர கண்காணிப்பு
காஜாங், பிப்ரவரி 11 –
Methadone வகை மருந்து வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில், 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததுடன், அவனது இரு இளைய சகோதரர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் இன்று காலை காஜாங் Sungai Ramal Baru,பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில் நிகழ்ந்தது. 11, 9 மற்றும் 5 வயதுடைய மூன்று சிறுவர்களும் மயக்கநிலையிலேயே மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனை அதிகாரிகள் போலீசுக்கு தகவல் வழங்கிய நிலையில், 35 வயதுடைய தாய் குழந்தைகளுக்கு Methadone மருந்து வழங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தின் பின்னணி, காரணம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட அந்த மருந்து எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டது என்பன குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் Datuk Shazeli Kahar சம்பவத்தை உறுதிப்படுத்தி, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.



