
கோலாலம்பூர் – ஜூலை-25 – 50-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் என நம்பப்படும் இரு வெளிநாட்டு ஆடவன்கள், செராஸ், ஜாலான் செமேரா பாடி (Jalan Semerah Padi) பகுதியில் நேற்று போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதிகாலை 3 மணிக்கு மேல் அப்பகுதியில் கைவரிசைக் காட்ட புதிய இடம் தேடிக் கொண்டிருந்த போது, அவர்களை புக்கிட் அமானின் Ops Aman 6 சோதனையில் ஈடிபட்டிருந்த போலீஸ் சுட்டு வீழ்த்தியது.
அவ்விருவரும், இதுவரை 3 மில்லியன் ரிங்கிட்டும் மேல் நட்டத்தை ஏற்படுத்தியுள்ள கொள்ளைக் கூட்டத்தின் தலைவன்கள் என நம்பப்படுகிறது.
கோலாலம்பூர், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பஹாங், பேராக் ஆகிய மாநிலங்களில் அக்கும்பல் கொள்ளையிட்டு வந்துள்ளது.
15 பேர் பலத்துடன் 2022 முதல் இந்தக் குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். சம்பவத்தின் போது அவர்கள் பயன்படுத்திய வெள்ளை நிற Honda Civic காரே, 2023-ல் திருடப்பட்டது தான் என தெரிய வந்தது.
அக்காரிலிருந்து, வீடுடைத்துத் திருடும் உபகரணங்கள், 2 ரிவால்வர் சுடும் ஆயுதங்கள், போதைப்பொருள் உள்ளிட்டவைக் கைப்பற்றப்பட்டன.
அக்கொள்ளைக் கூட்டத்தின் எஞ்சிய உறுப்பினர்களுக்கும் போலீஸ் வலை வீசியுள்ளது. விரைவிலேயே அவர்கள் பிடிபடுவர் என புக்கின் அமான் போலீஸ் கூறியது.