
கோலாலம்பூர், செப்டம்பர் 17 – இன்று காலை 11 மணி நிலவரத்தின் படி, நாடு முழுவதும் 30 பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (IPU) ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
மலேசிய சுற்றுச்சூழல் துறையான JAS மேற்கொண்ட கண்காணிப்பின்படி, பேராக் தாசெக் (Tasek) ஈப்போவில் IPU அளவு 185ஆகப் பதிவாகி, நாட்டிலேயே அதிகபட்சமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து பேராக் மாநிலம் செரி மஞ்சோங்கில் 181 ஆகவும், கெடா சுங்கை பட்டானி மற்றும் பேராக் மாநிலம் பெகோவில் தலா 160 ஆகவும் பதிவானது.
மேலும், சிலாங்கூர் ஜோஹான் செத்தியாவில் (JOHAN SETIA) 158 ஆகவும், பினாங்கின் செபராங் ஜெயா மற்றும் மிண்டன் (Minden), பேராக் தைப்பிங், சரவாக் கூச்சிங் ஆகிய பகுதிகளில் தலா 156 ஆகவும் பதிவாகின. கோலாலம்பூர் செராஸ், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் நீலாய் மற்றும் சரவாக் செரியான் ஆகிய பகுதிகளில் IPU அளவு 155 ஆக இருந்தது.
இதனிடையே, 31 பகுதிகளில் காற்றுத் தரம் மிதமான நிலையிலும், ஆறு பகுதிகளில் நல்ல நிலையிலும் பதிவாகியுள்ளது. நல்ல நிலையில் இருந்த பகுதிகளில் சரவாக் சரிகேய் (Sarikei) 50, சபா கோத்தா கினபாலு 30 என்ற குறைந்த அளவிலான IPU பதிவை பெற்றுள்ளன.



