
பேங்கோக், பிப்ரவரி-26 – 30 நாள் சுற்றுலா விசாவில் வந்து 25 ஆண்டுகள் தாய்லாந்திலேயே தங்கி விட்ட பிரிட்டன் ஆடவர் ஒருவழியாக பிடிபட்டுள்ளார்.
பெயர் குறிப்பிடப்படாத 60 வயது அந்நபர் 2000-ஆம் ஆண்டு தொடக்கத்தில் சுற்றுலா விசாவில் தாய்லாந்துக்குள் நுழைந்து அன்றிலிருந்து அங்கிருந்து வெளியேறவில்லை.
போலீஸ் சோதனையில் சிக்கும் போதெல்லாம், விசா நீட்டிப்பிலிருப்பதாகக் கூறி எப்படியோ அவர் தப்பி வந்துள்ளார்; விசா விவரங்களைக் குடிநுழைவுத் துறை மட்டுமே பரிசோதனை செய்ய முடியுமென்பது அவருக்கு வசதியாகப் போய்விட்டது.
இந்நிலையில், வட தாய்லாந்தின் ச்சியாங் மாய் மாகாணத்தில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட குடிநுழைவுத் துறை சோதனையில் அவர் சிக்கினார்.
வெளிநாட்டவர்கள் அடிக்கடி வந்துபோகும் இடத்தைக் குறி வைத்து அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மொத்தமாக 9,135 நாட்கள் அவர் தாய்லாந்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளார்; இது அந்நாட்டில் ஒரு புதியச் சாதனையாகும்.
2018-ல் தனது கடப்பிதழையும் அவர் எப்படியோ புதுப்பித்துள்ளார்.
உள்ளூர் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு 13 ஆண்டுகள் பேங்கோங்கில் வாழ்ந்தவர், நிதிப் பிரச்னையால் ச்சியாங் மாயில் குடியேறியுள்ளார்.
அவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு.
என்றாலும் வேலை வெட்டி இல்லாமல் பிரிட்டனில் உள்ள தனது குடும்பம் அனுப்பும் பணத்தில் தான் அவர் காலத்தை ஓட்டியுள்ளார்.
அவர் விரைவிலேயே தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்.