
ஹைதரபாத், மே-25-ஹைதரபாத்திலிருந்து 3,900 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சீனாவின் டோங்ஜி மருத்துவமனையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்திருக்கிறார் இந்திய மருத்துவ நிபுணரான சைட் முகமட் கௌவ்ஸ்.
ஹைதராபாத்தில் உள்ள (AINU ) எனப்படும் ஆசிய சிறுநீரகவியல் மற்றும் சிறுநீர்ப்பை மருத்துவ நிலையத்தில் ஒரு நோயாளி சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சையைச் செய்த மருத்துவர் இந்திய மருத்துவமனையில் இல்லை.
மே 18ஆம் தேதியன்று, AINU-வின் ரோபோடிக் மற்றும் குறைந்தபட்ச அணுகல் சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சை இயக்குநரான டாக்டர் சைட் முகமட் கௌவ்ஸ் (Syed Mohammed Ghouse), ஹைதராபாத்தில் இருந்த ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தார்.
90 நிமிடங்கள் நீடித்த இந்த அறுவை சிகிச்சை, தொலைவான தூரத்திலிருந்து செய்யப்பட்ட, உலகின் முதல் தொலைநிலை-ரோபோடிக் சிறுநீர்க்குழாய் மறுபொருத்துதல் அறுவை சிகிச்சையாக மாறியுள்ளது.
இதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக நவீன அறுவை சிகிச்சை அரங்குகளில் யாருக்கும் தெரியாமல் இருந்து வந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ரோபோ அமைப்பு மற்றும் 5ஜி இணைப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை , எல்லைகளற்ற அறுவை சிகிச்சையை எடுத்துக்காட்டியதுடன், குறைந்த தாமதம் மற்றும் தடையற்ற துல்லியத்துடன் தொலைதூரங்களில் நிபுணத்துவ சிகிச்சையை வழங்க வழிவகுத்தது.
இதன்வழி அந்த மருத்துவர் நோயாளி ஒருவரை நேரடியாக சந்திக்காமல் அவருக்கு சிறுநீர்ப்பை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை புரிந்துள்ளார்.
ரோபோடிக் அறுவை சிகிச்சையில், அறுவை சிகிச்சை நிபுணர் நோயாளியின் அவர் வசதியான ஒரு இடத்தில் அமர்ந்து, உடலின் உட்புறத்தின் பெரிதாக்கப்பட்ட முப்பரிமாணப் படத்தைப் பார்த்து, கை அசைவுகள் மூலம் ரோபோடிக் கைகளைக் கட்டுப்படுத்துகிறார்.
நல்ல இணைய இணைப்புடன் முடிந்தவரை தொலைதூரம் செல்லும்போது, உலகின் எந்த மூலையிலிருந்தும் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என டாக்டர் முகமட் கௌவ்ஸ் தெரிவித்தார்.



