
கோலாலம்பூர், ஜூலை 11 – சுமார் 82,637 சுகாதார பணியாளர்களுக்கு 45 மணி நேர shift வார வேலையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான Madani அரசாங்கம் மற்றும் பொதுச் சேவைத்துறையின் முடிவு ஆக்கப்பூர்வமான மற்றும் வரவேற்கக்கூடிய ஒன்றாகும் என செனட்டர் டாக்டர் RA லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இதன் வழி சுகாதாரத் துறையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட பணியாளர்கள் உண்மையிலேயே நிம்மதி பெருமூச்ச அடைவார்கள் என்பது உறுதியாகும்.
நேரத்தைப் பொருட்படுத்தாமல் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இரவு பகலாக உழைக்கும் சுகாதார பணியாளர்களின் தியாகங்கள், சிரமங்கள் மற்றும் அவர்களின் விடாமுயற்சிக்கு இதுவொரு சிறந்த அங்கீகாரமாகும் என லிங்கேஸ்வரன் வர்ணித்தார்.
சுகாதார அமைச்சின் ஐந்து முக்கியமான சேவைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வாரத்திற்கு 42 மணிநேர வேலை நேரத்தை நிர்ணயித்த நடவடிக்கை, முன்களப் பணியாளர்களின் , உடல், மனநிலை மற்றும் அவர்களது நல்வாழ்வில் அரசாங்கம் காட்டியிருக்கும் பரிவுக்கு இது நல்ல சான்றாகும்.
மலேசிய மடானி அரசாங்க கொள்கை மனித நேயம் மற்றும் கருணையின் மதிப்புக்கு முன்னுரிமை வழங்கியிருப்பதோடு இந்த நடவடிக்கை அரசு ஊழியர்களைப் பாராட்டுவதற்கும், சிறந்த எதிர்காலத்திற்காக நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கும் அதிகமான முயற்சிகளின் தொடக்கமாக இருக்கும் என தாம் நம்புவதாக லிங்கேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.