
கோலாலம்பூர், அக்டோபர் 24 –
வரவிருக்கும் 47வது ஆசியான் (ASEAN) உச்ச மாநாட்டை முன்னிட்டு, அக்டோபர் 26 முதல் 28 வரை, பொதுமக்கள் அவசியமில்லாமல் கோலாலம்பூர் நகரத்துக்குள் நுழைய வேண்டாமென்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கவிருக்கும் இந்த மாநாடு, சிறப்பாக நடைபெற, சில சாலைகள் மூடப்படும் என்றும் மாற்று வழிகள் அமைக்கப்படுமென்றும் அறியப்படுகின்றது. எனவே மக்கள் தங்களின் பயணத்தை முன்னதாகத் திட்டமிட்டு, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு மலேசிய காவல்துறை தலைவர் (PDRM), டத்தோ ஸ்ரீ முகமட் காளிட் இஸ்மாயில்ன் (Datuk Seri Mohd Khalid Ismail), இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் தெரிவித்தார்.
சாலை மூடல்கள் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாநாடு நடைபெறும் நாட்களில், குறிப்பாக அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்..
KLCC ஐ சுற்றியுள்ள சாலைகள் அதாவது ஜாலான் அம்பாங், ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் துன் ரசாக், ஜாலான் பி. ரம்லீ, ஜாலான் பினாங் மற்றும் பெர்சியாரன் KLCC ஆகிய சாலைகளும் MEX, ELITE, NKVE மற்றும் GUTHRIE உள்ளிட்ட சில முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்படவுள்ளன.
மாநாட்டின் போது அமைதிக்குத் தடையாகச் செயல்படுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, சந்தேகத்திற்கிடமான எந்தச் செயலையும் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டது.



