வாஷிங்டன், ஆகஸ்ட் 15 – அமெரிக்காவின் ஓக்லஹாமா (Oklahoma) மாநிலத்தில் 48 வருட சிறைவாசத்தின் பின்னர் க்ளின் சிம்மன்ஸ் (Glynn Simmons) என்ற நபர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
தான் செய்யாத கொலைக்காக சிறையில் இருந்த அந்த 71 வயது முதியவரை குற்றவாளி அல்ல என அறிவித்த அமெரிக்க நகரம், 7.15 மில்லியன் அமெரிக்க டாலரை இழப்பீட்டு தொகையாக வழங்கியுள்ளது.
1975ஆம் ஆண்டு, மதுபானக் கடை ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அக்கடையின் 30 வயது ஊழியரைக் கொன்றதாகத் சிம்மன்ஸ் மற்றும் ரான் ராபர்ட்ஸ் (Don Roberts) என்பவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தினால் இவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகளில் மரண தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இது குறித்த வழக்கு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, சிம்மன்ஸ் குற்றமற்றவர் என கூறி கடந்த ஆண்டு தண்டனையை ரத்து செய்து, அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க நீதிமன்ற வரலாற்றிலேயே “குற்றச்செயலிலிருந்து விடுபட்டவர்களின் தேசிய பட்டியலில்” (National Registry of Exonerations) மிக நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவராகிறார் க்ளின் சிம்மன்ஸ்.