
கூச்சிங், செப்-25-Maybank கணக்கிலிருந்து அங்கீகரிக்கப்படாத ஐந்து பணப் பரிமாற்றங்கள் மூலம் 48,999.99 ரிங்கிட்டைப் பறிகொடுத்த ஓய்வூதியம் பெறும் ஆடவர் ஒருவர், வங்கி வழங்க முன்வந்த 9,799.99 ரிங்கிட் சமரத் தீர்வுத் தொகையை நிராகரித்துள்ளார். சரவாக் Padungan சட்டமன்ற உறுப்பினர் Chong Chieng Jen அவ்விவகாரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
Lo எனும் அந்நபரின் கணக்கிலிருந்து ஆகஸ்ட் 2 முதல் 3 ஆம் தேதி அதிகாலை வரை அவருக்குத் தெரியாமலேயே ஐந்து பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் FPX, BSN, RYT வங்கி, தனிநபர் மற்றும் Alliance வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத பரிமாற்றங்கள் குறித்து 24 மணி நேரத்திற்குள் வங்கிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், பரிமாற்றங்களைத் தடுக்க முடியவில்லை என்றும், Maybank கணக்குகள் மற்றும் பரிமாற்றங்களுக்கு ‘cooling-off’ கால நடைமுறை இல்லை என்றும் வங்கி தெரிவித்ததாக Chong குறிப்பிட்டார்.
தாம் தலையிட்ட பின், Maybank கடந்த வாரம் 9,799.99 ரிங்கிட் அதாவது மொத்த இழப்பில் 20 விழுக்காடு தொகையை முழுமையான மற்றும் இறுதித் தீர்வாக வழங்க முன்வந்ததாக அவர் தெரிவித்தார். இருப்பினும், Lo அந்தத் தொகையை ஏற்க மறுத்துள்ளதாகவும், தமது முழு இழப்பையும் ஈடுசெய்ய வேண்டும் எனக் கோருவதாகவும் அவர் கூறினார்.
அவ்விவகாரம் தொடர்பில் காவல்துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும். Maybankக்கின் பரிவர்த்தனை அமைப்பு முறை மற்றும் பணம் சென்றடைந்த வங்கிகள் ஆகியவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், Loவுக்கு ஏற்பட்ட முழு இழப்பையும் ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சரவாக் மாநில DAP மற்றும் Pakatan Harapan தலைவருமான Chong வலியுறுத்தினார்.



