
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-31 -50 வயதுக்கு மேற்பட்ட நடப்பு மற்றும் முன்னாள் பத்திரிகையாளர்களின் நலனுக்காக, 1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மருத்துவப் பரிசோதனை நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் இன்று அத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
ECM Libra அறக்கட்டளையின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், தகுதிபெறும் பத்திரிகையாளர்களுக்கு CVSKL மருத்துவமனையில் 40 விழுக்காடு கட்டணக் கழிவுடன் மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்படும்.
குறிப்பாக, இருதய நோய்கள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற, பத்திரிகையாளர்கள் குறைந்தது ஐந்தாண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
மேலும், மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களாகவும், மலேசிய ஊடக மன்றம் அல்லது தேசிய பத்திரிகையாளர் சங்கத்தின் அங்கீகாரம் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, 2027ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறும் ஃபாஹ்மி பரிந்துரைத்தார்.
விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் பற்றுச் சீட்டு பயன்பாடு உள்ளிட்ட இத்திட்டத்தின் மேல் விவரங்களை CVSKL அறக்கட்டளை பின்னர் அறிவிக்கும்.



