ஜெருசலம், ஏப் 11 – இஸ்ரேல் – ஹமாஸ் நெருக்கடியை தொடர்ந்து ஏற்பட்ட தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இஸ்ரேலின் கட்டுமான தொழில்துறைக்கு உதவுவதற்காக 6,000 த்திற்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் ஏப்ரல் மற்றும் மே மாத இறுதிக்குள் இஸ்ரேல் சென்றடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் , நிதியமைச்சு, கட்டுமானம் , வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையே காணப்பட்ட உடன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு வாடகை விமானத்தின் மூலம் இந்திய தொழிலாளர்கள் இஸ்ரேல் சென்றடைவார்கள்.
புதன்கிழமையன்று இஸ்ரேல் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன. இஸ்ரேலின் கட்டுமான தொழில்துறையில் குறைவான தொழிலாளர்களே உள்ளனர். அந்நாட்டிலிருந்த 80,000 கட்டுமான தொழிலாளர்களில் பெரும்பாலோர் பாலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேற்குக் கரை மற்றும் காஸா முனையைச் சேர்ந்த 17,000 தொழிலாளர்களும் அடங்குவர். அவர்களில் பெரும்பாலோரின் வேலை பெர்மிட்டுகள் கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து ரத்துச் செய்யப்பட்டது.