
நாட்டின் 69-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 7 மாநிலங்களில் 7 நாட்களுக்குள் 12 மலைகளை ஏறும் புதிய சாதனை முயற்சியை மலையேற்ற வீரர் லோகசந்திரன் ராமசந்திரன் இன்று தொடங்கியுள்ளார்.
ஜோகூரின் Gunung Ledang மலையில் இன்று காலை 8 மணிக்கு தனது சாதனைப் பயணத்தின் முதல் அடியை எடுத்து வைத்த லோகசந்திரன், முதல் Check Point-ஆன Bukit Semput மற்றும் Check Point-ஆன இரண்டாவது Hentian Meranti-ஐ கடந்து தனது முதல் நாள் இலக்கை மதியம் 1.30 அளவில் அடைந்துள்ளார்.
இது லோகசந்திரனின் இரண்டாவது சாதனை முயற்சி. கடந்த ஆண்டு 7 நாட்களில் 9 மலைகளை ஏறி Malaysia Book of Records-இல் இடம்பிடித்த இவர், இம்முறை அதையே மிஞ்சும் வகையில் 7 நாட்களில் 12 மலைகளை ஏறி தனது சொந்த சாதனையை முறியடிக்க இலக்கு வைத்துள்ளார்.
மலேசியாவின் பல மாநிலங்களில் அமைந்துள்ள 12 மலைகளைத் தொடர்ந்து ஏறும் இந்தச் சவாலான பயணம், ஆகஸ்ட் 31ஆம் தேதி பேராக்கின் Gunung Kerunai மலையில் நிறைவடையவுள்ளது. ஏழு நாட்களிலும் சேர்த்து சுமார் 60 முதல் 70 மணி நேர மலையேற்றத்தை மேற்கொள்ளவும் இவர் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கெனவே ஒரு சாதனையைப் படைத்த இவர், அதில் நிற்காமல் தன்னுடைய முந்தைய இலக்கையே மிஞ்ச முயல்வது பல இளைஞர்களுக்கும் ஊக்கமளிக்கும் ஒரு பயணமாக அமைந்துள்ளது.
இந்த முயற்சியில் லோகசந்திரன் மட்டும் தனியாக இல்லை. இவருடன் இளைஞர்கள் அடங்கிய ஒரு வலுவான குழுவும், இவரது குடும்பத்தினரும் முழுமையான ஆதரவுடன் இணைந்துள்ளனர். ஒரு இலக்கை நோக்கி இளைஞர்கள் ஒன்றுபட்டு செயல்பட்டால், எவ்வளவு பெரிய சாதனையையும் எட்ட முடியும் என்பதற்கு இந்தக் குழு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
லோகசந்திரனின் இந்த இரண்டாவது சாதனை முயற்சிக்கு ஆதரவளிக்க விரும்பும் பொதுமக்கள், தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள், தேவையான எந்த வகையிலான உதவியையும் இவரது குழுவைத் தொடர்புகொண்டு வழங்கலாம்.
லோகசந்திரனின் முந்தைய சாதனை முயற்சியிலும் இவருடன் இணைந்து பயணித்த வணக்கம் மலேசியா, இம்முறையும் இவரது முழு சாதனைப் பயணத்துடன் மீண்டும் இணைகிறது.
அடுத்த ஏழு நாட்களில், ஒவ்வொரு மலை, ஒவ்வொரு கட்டம், ஒவ்வொரு முன்னேற்றத்தையும் தொடர்ந்து பதிவு செய்து, லோகசந்திரனின் இந்த சாதனைப் பயணத்தின் தினசரி தகவல்களை வணக்கம் மலேசியா உங்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளது.
இவரின் பயணம் எங்கே சென்றடைந்துள்ளது, அன்றைய சவால்கள் என்ன, அடுத்த இலக்கு எது என்பதனைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து வணக்கம் மலேசியாவைப் பின்தொடருங்கள்.



