700 ஆண்டுகளாக சேர்ந்து வந்த அழுத்தம்; இமயமலையில் 8.8 ரிக்டர் அளவில் 2 மிகப்பெரிய நிலநடுக்கங்களுக்கான அபாயம் என ஆய்வு எச்சரிக்கை

காட்மண்டு, டிசம்பர்-4,
இமயமலையில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் குறித்து புதிய ஆராய்ச்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமயமலையின் மையப்பகுதியில் சுமார் 800 கிலோ மீட்டர் நீளமான பகுதியை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், கடந்த 500–700 ஆண்டுகளாகச் சேர்ந்து கொண்டிருக்கும் நிலத்தட்டு அழுத்தம் ஒரே நேரத்தில் வெளியானால், 8.8 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய 2 நிலநடுக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பீதியைக் கிளப்பியுள்ளனர்.
அப்பகுதி பல நூற்றாண்டுகளாக பெரிய நிலநடுக்கம் எதுவும் இல்லாமல் ‘பூட்டப்பட்ட’ நிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியத் தட்டு மற்றும் யுரேசியத் தட்டு மோதலால் உருவான மிகப்பெரிய அழுத்தம் தொடர்ந்து சேர்ந்து கொண்டிருப்பதை துணைக்கோள் மற்றும் GPS அளவீடுகள் காட்டுகின்றன.
நிலநடுக்கம் எப்போது வரும் என்பதை விஞ்ஞானிகளால் துல்லியமாக கணிக்க முடியாதபோதிலும், ஆபத்து மிக தீவிரமானது என்பதை அவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே இமயமலைக்கு அருகேயுள்ள நாடுகள் பேரிடர்களை எதிர்கொள்ளும் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.



