Latestமலேசியா

80 ஆண்டுகால பெருமையைக் கொண்டாடிய குரோ தமிழ்ப்பள்ளி; கோலாகலமாக நடைபெற்ற ‘அமுத விழா’

பேராக் உலு பேராக் மாவட்டத்தில் அமைந்துள்ள குரோ தமிழ்ப்பள்ளியின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘அமுத விழா’, ஆகஸ்ட் 29ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

எண்பது ஆண்டுகால கல்விப் பயணத்தையும், பள்ளியின் வளர்ச்சிக்கு பங்களித்த முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரையும் நினைவுகூரும் வகையில் இவ்விழா அமைந்தது.

பேராக் மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் பெங்காலான் உலு சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டிராஜா முகமது தஜோல் ரொஸ்லி பின் கஜாலி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தார். முன்னாள் மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டிய அவர், பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இவ்விழாவில், முன்னாள் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெங்காலான் உலு வட்டார முன்னாள் இந்திய ஆசிரியர்கள் மற்றும் மூத்த முன்னாள் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘திருவள்ளுவர் வாசிப்புக் குடில்’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பேரா மாநில முதல்வரின் சார்பில் 45 ஆயிரம் ரிங்கிட், கல்வி அமைச்சரின் சிறப்பு நன்கொடையாக 5 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டன.

மேலும், முன்னாள் மாணவர் நித்தயநாதன் பழனி பள்ளிக்கு ஒரு திறன்பலகையை நன்கொடையாக வழங்கினார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் மீண்டும் ஒன்றுகூடி, தங்களது பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது ‘அமுத விழாவின்’ சிறப்பம்சமாக அமைந்தது. கடந்த காலப் பெருமையை நினைவுகூர்ந்து, பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய நிகழ்வாக இவ்விழா அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!