
செபராங் பிறை, ஆகஸ்ட்-31,பினாங்கு, கம்போங் மக்காவ் சுவாவைச் சேர்ந்த 19 குடும்பங்களுக்கு வாடகைக்குச் சொந்தமாகும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகளுக்கான கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தனியார் நில உரிமையாளர் நிலத்தை விற்க முடிவு செய்ததை அடுத்து, வீடுகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு இந்தத் திட்டம் நிரந்தர தீர்வளித்துள்ளது.
வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு இந்தக் கடிதங்களை வழங்கினார்.
இதன் கீழ், மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் வகையில், Taman Pekatra Indah-வில் 42,000 ரிங்கிட் மதிப்பிலான ‘ருமா முத்தியாராக்கூ’ வீடுகள் வாடகைக்குச் சொந்தமாகும் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றன.
தனியார் நிலப் பிரச்னையாக இருந்தாலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சுந்தராஜு தெரிவித்தார்.
கடிதங்களைப் பெற்றுக் கொண்ட குடும்பங்கள் நெகிழ்ச்சியுடன் மாநில அரசுக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டனர்.



