
தமிழகம், ஆகஸ்ட்-31-தமிழகம், திருவண்ணாமலையில் 16 வயது சிறுவனின் வயிற்றில் இருந்து 23 நாணயங்கள் உட்பட 43 பொருட்கள் அகற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான மனவளர்ச்சி குன்றிய பிரித்திக் ரோஷன் என்ற சிறுவன் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக அண்மையில் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
எக்ஸ்-ரே (Scan) பரிசோதனை செய்து பார்த்த போது அச்சிறுவனின் இரைப்பையில் ஏராளமான உலோகப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. சிறுவனின் தாயாரை விசாரித்ததில் வீட்டில் இருந்து பல பொருட்கள் அடிக்கடி காணாமல் போனதைக் கவனித்ததாக அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அச்சிறுவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது பிரித்திக் ரோஷனின் வயிற்றில் இருந்து 23 நாணயங்கள்,ஹேர்பின்கள், ஆணிகள், நகவெட்டி, செயின்கள், தாயத்து, நட்டுகள் என மொத்தம் 43 பொருட்கள் பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டன.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சீராகி, நலம் பெற்று அச்சிறுவன் வீடு திரும்பியுள்ளார். பொருளாதார வசதி இல்லாத அச்சிறுவனின் குடும்பத்தினரிடம் சிகிச்சை கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லையாம்.



