Latestமலேசியா

சிலாங்கூரில் 380 காகிதத் தட்டுகளில் ஜாலூர் கெமிலாங் – பாலர் பள்ளி மாணவர்களின் சாதனை

சிலாங்கூர், ஆகஸ்ட் 31 – சிலாங்கூர், சுங்கை பூலோவிலுள்ள ‘பிந்தார் அரிப்’ (Pintar Arif) பாலர் பள்ளியைச் சேர்ந்த 28 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் இணைந்து 380 காகிதத் தட்டுகளுக்கு வர்ணம் தீட்டி, ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியை உருவாக்கியுள்ளனர்.

4 முதல் 6 வயதுக்குட்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து ஒரே நாளில் இந்தப் பணியை ஆர்வத்துடனும் தேசப் பற்றுடனும் நிறைவு செய்தனர்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, வர்ணம் தீட்டப்பட்ட 380 காகிதத் தட்டுகளையும் ஒன்றிணைத்து தேசியக் கொடியை உருவாக்கியபோது, மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 14 முதல் 28ஆம் தேதி வரை குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, சிறுவர் திறமைக் காட்சிகள் மற்றும் பிரமாண்ட தேசியக் கொடி காட்சிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

2002ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தப் பாலர் பள்ளியை, அதன் தற்போதைய உரிமையாளர் குமாரி ஆ. கலைவாணி, 2022ஆம் ஆண்டு பொறுப்பேற்று நடத்தி வருகிறார். தேசிய தினத்தை முன்னிட்டு, குமாரி ஆ. கலைவாணி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் மலேசிய மக்களுக்கு தங்களது இனிய தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!