Latestஇந்தியாஉலகம்

85% வாக்குப்பதிவு – விஜயின் ‘தாக்கமா’?; தமிழக அரசியலில் மாற்றத்திற்கான அறிகுறியா?

சென்னை, ஏப்ரல்-24-தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஒட்டுமொத்தமாக 84.69 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத் தேர்தல் வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவு என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு 2011-ல் பதிவான 78.29 விழுக்காடு வாக்குகளே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

​மாவட்ட வாரியாகப் பார்த்தால், கரூர் மாவட்டம் 91.78 விழுக்காடு வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.

வாக்களித்த மக்களில் சிலர் வணக்கம் மலேசியாவுடன் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இவ்வேளையில் இந்த அபரிமித வாக்குப் பதிவு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல்வேறு கண்ணோட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இத்தேர்தலில் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தை இது பிரதிபலிப்பதாக சிலர் கூறியிருக்கின்றனர்.

குறிப்பாக அதிகமான இளையோர் வெளிநாடுகளிலிருந்தும் படையெடுத்து மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்; அதே சமயம் தமிழகத்தில் இருப்பவர்கள் கூட வரலாறு காணாத வகையில் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வாக்களித்திருப்பதால் தான் இந்த அளவுக்கு உயரிய வாக்குப் பதிவு சாத்தியமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவ்வகையில், அதிகப்படியான வாக்குப் பதிவானது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என கூறுகின்றனர்.

அல்லது தொங்கு சட்டமன்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதை இது காட்டுவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், தி.மு.கவுக்கு ஆதரவான ஒரு கண்ணோட்டம்…கடந்த தேர்தலை விட சுமார் 20 லட்சம் வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பதிவாகியுள்ளதால் இதுவொன்றும் பெரிய மாற்றமில்லை என தெரிவிக்கிறது.

அதாவது, ஒவ்வொரு தேர்தலின் போதும் 20 முதல் 30 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பது இயல்பே என்றும், இதனால் வாக்குப் பதிவு கூடுவது சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான் என்றும் அத்தரப்பு வாதிடுகிறது.

இது தவிர, SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பில் சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; ஆக அந்த அடிப்படையில் இந்த அதீத வாக்குப் பதிவு உயர்வு மிக மிக இயல்பான ஒன்றே…

அதை வைத்து இதுவொரு வரலாற்றுச் சாதனை என்றோ அல்லது மே 4 வாக்கு எண்ணிக்கையின் போது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என்றோ சொல்லி விட முடியாது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இப்படி பலவாறான கருத்துகளுக்கு மத்தியில், உயரிய வாக்குப்பதிவு தேர்தல் முடிவுகளில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!