
பெட்டாலிங் ஜெயா, மே-9-மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp, 2025 SPM தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற 934 மாணவர்களை இன்று கௌரவித்தது.
இவர்கள், சுங்கை பூலோ சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 12 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
RM318,900 மதிப்பிலான சன்மானத் தொகை வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, கோத்தா டாமான்சாரா, செக்ஷ்ன் 7 பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
சுமார் 2,000 பேர் கலந்து கொண்ட இந்த விழாவில், மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்த முயற்சி, மாணவர்களின் கல்விச் சிறப்பை மட்டுமல்லாமல், மடானி மதிப்புகளை பிரதிபலிக்கும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பை வலுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடருமென்றார்.
ஊக்கத் தொகைப் பெற்ற மாணவர்கள் சிலர், தங்களின் மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்வில், அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் Dr Mohd Shaharin Umar, HRD Corp தலைவர் டத்தோ Rusli Jaafar, அதன் நிர்வாகத் தலைவர் டத்தோ Shamir Aziz உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



