கோலாலம்பூர், ஏப்ரல் 2 – எதிர்வரும் ஹரி ராயா விடுமுறை காலத்தில், JPJ – சாலை போக்குவரத்து துறை, சாலைப் பயனர்களுக்கு 13 ஆயிரம் சம்மன்களை வெளியிடுவதை தமது KPI – செயல்திறன் குறியீடாக கொண்டுள்ளதாக வைரலாகி இருக்கும் செய்தியை, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மறுத்துள்ளார்.
பண்டிகை காலத்தில், சாலை பாதுகாப்பை உறுதிச் செய்வதும், சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதும் தான், சாலை போக்குவரத்து துறையின் முதன்மை இலக்காகும்.
அதனால், எதிர்வரும் ஹரி ராயா விடுமுறை காலத்தில், அமலாக்க நடவடிக்கைகள் கட்டாயம் மேற்கொள்ளப்படும். எனினும், சாலை பயனர்கள் சட்ட திட்டங்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது முக்கியமாக அந்த சோதனைகளின் போது கண்காணிக்கப்படுமென லோக் தெளிவுப்படுத்தினார்.
விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சம்மன்கள் வழங்கப்படும் என, இன்று தலைநகர், TBS பேருந்து முனையத்திற்கு வருகை புரிந்த போது லோக் சொன்னார்.
அதனால், சமூக ஊடகங்களில் பகிரப்படும் வைரல் செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, ஹரி ராயா விடுமுறை காலத்தில், 13 ஆயிரம் சாலை அபராத பதிவுகளை வெளியிடவும், ஆயிரத்து 500 வாகனங்களை பறிமுதல் செய்யவும் JPJ இலக்கு கொண்டுள்ளதாக கூறப்படும் செய்தி ஒன்று, வைரலானது குறிப்பிடத்தக்கது.