சிரம்பான், ஏப்ரல் 4 – 2023 ஏப்ரல் மாதம் தொடங்கி தங்களின் ஐந்து வயது மகனை அடித்து காயப்படுத்திய கணவன் மற்றும் மனைவிக்கு எதிராக இன்று நெகிரி செம்பிலான், சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 29 வயது முஹமட் ஜுல் சாபிக் சம்மாடி மற்றும் 25 வயது நூர்வதாதுல்பதானா முஹமட் ஆகிய அவ்விருவரும் தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
அவர்கள் இருவரும் இணைந்து, தங்கள் பராமரிப்பில் இருந்த ஐந்து வயது பாலகனை, பிரம்பு மற்றும் துணிகளை மாட்ட பயன்படுத்தப்படும் “ஹெஙர்” கம்பிகளை கொண்டு வேண்டுமென்றே அடித்து துன்புறுத்தி காயம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டு ஏப்ரல் தொடங்கி கடந்த மார்ச் 23-ஆம் தேதி வரையில், நீலாயிக்கு அருகில், மந்தின், ஜாலான் பஞ்சேந்திராவிலுள்ள, வீடொன்றில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
அவர்களை, தலா ஐயாயிரம் ரிங்கிட் உத்தரவாத் தொகையில் விடுவிக்க இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கிய வேளை ; இவ்வழக்கு விசாரணை மே 17-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.