கோலாலம்பூர், ஏப் 7 -உள்ளூர் அரிசி விநியோகத்தின் பற்றாக்குறைக்கு மத்தியில் மக்கள் மரவள்ளிக் கிழங்கை உட்கொள்வதை மாற்று கார்போஹைட்ரேட் அல்லது மாவு சத்து உணவாக கருத வேண்டும் என நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல் மக்களுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
அதிகமான மலேசியர்கள் துணிச்சலாக இருக்க வேண்டும் என்றும் அரிசியை மட்டுமே முக்கிய உணவாக நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார். அரிசி பற்றாக்குறை ஒரு பிரச்சினை என்றால், நாம் சாப்பிடும் அரிசியின் நோக்கம் என்ன? கார்போஹைட்ரேட் பெறுவதே நோக்கம்.
எனவே அரிசி நெருக்கடிக்கு தீர்வு காண மாற்று வழி இருப்பதாக ஜொஹாரி அப்துல் தெரிவித்துள்ளார். மரவள்ளிக்கிழங்கு அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அரிசியில் உள்ள சர்க்கரை அளவை ஒப்பிடும் போது, அது மிகவும் குறைவு என சுங்கை பட்டாணியில் பண்டார் பெர்டானாவில் மடானி விற்பனை திட்டத்தைத் தொடக்கிவைத்த பின் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வாழ்க்கை செலவின தேசிய நடவடிக்கை மன்றத் தலைவர் சையத் அபு ஹுசின்னும் கலந்துகொண்டார். மாற்று உள்ளூர் உணவு வளங்களை ஆராய்வதன் மூலம் இறக்குமதி மீதான நம்பிக்கையை குறைக்க முடிவும் என்றும் ஜொஹாரி அப்துல் கூறினார். இதனை கருத்திற்கொண்டு மாநில அரசுகளும் உள்ளூர் அதிகாரிகளும் கைவிடப்பட்ட நிலத்தில் மாற்று உணவு வளங்களை உற்பத்தி செய்யவதை மக்களுக்கு ஊக்குவிக்க வேண்டும்.
கூடுதல் விநியோகம் இருந்தால் விலை நிச்சயம் குறையும் . எனவே இதற்கான முயற்சியில் துணிச்சலாக இறங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஒரு ஆண்டுக்கு முன் நமது உணவு உற்பத்தி 60 பில்லியன் ரிங்கிட்வரை இருந்தது. அதே வேளையில் பேராக்கில் வெங்காய உற்பத்தி திட்டம் உட்பட அண்மைய வெற்றிகளையும் ஜொஹாரி அப்துல் சுட்டிக்காட்டினார்.